Sunday, September 29, 2013

SARAGUNA PALIMPA - POOCHI SRINIVASA IYENGAR

பூச்சி ஸ்ரீநிவாச ஐய்யங்கார் என்றவுடன்,   சரகுண பாலிம்ப என்ற பாடலும்,   HMV 78 RPM க்ராமபோன் தட்டுகளும் தான் நினைவுக்கு வருகின்றது. 
இந்த பாடலின் பிண்ணனி நிகழ்ச்சி ஒரு வாழைப் பழத்தோலினால் உண்டானது என்றால் நம் எல்லோருக்கும் ஆச்சரியத்தை உண்டாக்கும். கறிகாய் அங்காடிக்குச் சென்று வரும் சமயம் வாழைப்பழத்தின் தோலில் வழுக்கிவிழுந்து, மிகவும் நோய்வாய்ப்பட்டு வெங்கடேசப் பெருமாளை நினைத்து மனமுருகிப் பாடின பாட்டு. அன்று ஆதிமூலமே என்று கதறிய யானைக்கு காட்சி தந்தாய். எனக்கு அருள் புரியமாட்டாயா என்று மனமுருகிப் பாடிய பாட்டு.
ஸம்ஸக்ருத மொழியிலும், தெலுங்கிலும் பளிச்சென்ற க்ருதிகள், வேகமான சிட்டைஸ்வரங்கள், ஹுசேனி, நவரஸ கன்னடா, தேவமனோஹரி, கீரவாணி, சுத்த ஸாவேரி என்ற ரஸமான ராகங்கள், மத்யம கால ஸாஹித்யங்கள் என்று அன்றயகால அபூர்வ பாடாந்திரம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். அப்படிப்பட்ட வாக்கேயக்காரர் ராமநாதபுரம் ஸ்ரீநிவாஸ ஐயங்கார் என்ற பூச்சி ஸ்ரீநிவாச ஐயங்கார்.
பூச்சி என்ற அடைமொழி ஏன் அவருக்கு வந்த்து. பூச்சியின் ரீங்காரம் போன்றது அவர் சாரீரம். அந்த நாட்களில் முதலில் 4 ½ (F#) ஸ்ருதியிலும் பின்பு 3 (E) ஸ்ருதியிலும் பாடி வந்தார் என்று அவர் சிஷ்யர்கள் சொல்லி வாய் வழி வந்த செய்தி. அவரது ரீங்காரமான சாரீரத்தை மெச்சி அவருக்கு இந்த பெயர் வந்ததாக சிலர் கூறுவர். மற்றுமொரு ரசமான செய்தி. அவர் உணவு உண்ட பின் செரிமானத்திற்காகவும், உடல் நறுமணத்திற்காகவும் சந்தனம் பூசினதாக ஒரு செய்தி. சந்தனம் பூசிய / ஜவ்வாது பூசிய ஐய்ங்கார், பூச்சி ஸ்ரீநிவாச ஐய்யங்காராக பெயர் திரிந்தது.  அவர் பாடல்களில் ஒரு துடிப்பு, பொருள் செறிவு, வேகமான நடை, சுருங்கச் சொல்லி எளிதில் விளங்க வைக்கும் நயம் போன்ற காரணத்தினால் பூச்சி போல் துரு துருவென்ற ஸாஹித்யம் என்று சொல்லி, அவர் பூச்சி ஸ்ரீநிவாச ஐய்ங்காரானார்.
பட்டிணம் சுப்பிரமணிய ஐய்யரின் ப்ரதம் சிஷ்யரான இவர், குரு கடாக்ஷத்துடன் வியாழக் கிழமை ஆவணி மாதத்தில் பிறந்ததாகச் சொல்வர்.
ராமநாதபுர சமஸ்தானத்தை அலங்கரித்த இவருக்கு அரியக்குடி ராமானுஜ ஐய்யங்கார், கடயநல்லூர் ஸ்ரீநிவாச ஐய்யங்கார், சேலம் துரைஸ்வாமி ஐய்யங்கார், காரைக்குடி ராஜாமணி, குற்றாலம் ஸ்ரீநிவாச ஐய்யர் என்ற பெரும் பாடகர்கள் இவரது ப்ரதம சிஷ்யர்கள்.
இவர் வர்ணம், ஜாவளி, தில்லானா என்ற அங்கங்களில் பல உருப்படிகள் கொடுத்துள்ளார். வராளி ராக வர்ணமும், லக்ஷ்மீச தாளம் என்ற ஒரு அறிய தாளத்தில் ஒரு தில்லானாவும் இவரை கர்நாடக சங்கீதத்தில் ஒரு உன்னதமான இடத்தில் இன்றும் அவரை அமரச் செய்திருக்கிறது.  ஸ்ரீரகுகுல நிதிம் என்ற ஹுசேனி ராக க்ருதி மிகவும் அறிதான க்ருதி. ஹுசேனி ராகத்தின் முழுமையான பரிமாணத்தைக் இக் க்ருதியில் காணலாம் / அனுபவிக்கலாம். 

No comments:

Post a Comment