Thursday, January 10, 2013

Mahaperiyava's wish will always be God's wish


மஹா பெரியவாளைப் பற்றி தினமும் பல செய்திகளை பலர் பலவிதமான உபகரணங்கள் மூலம் பகிர்ந்து கொள்கிறார்கள். ஐம்பது மணிநேர ஒலித் தட்டுகள் தெய்வத்தின் குரலில் விரைவில் வர உள்ளது. சமீபத்தில் எனக்கு ஒருவர் அனுப்பிய ஒரு செய்தி என்னை மிகவும் கவர்ந்தது. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் இன்புறுகிறேன்.

ஆந்த்ராவில் யாத்ரை பண்ணிக் கொண்டிருந்தபோது, பெரியவாளுடன் கூட போகும் சிஷ்யர்கள் ரொம்ப குறைவு.  எந்தவிதமான படாடோபமோ, ப்ருதாவளியும் கிடையாது. உள்ளடங்கிய பகுதிகளில், பெரியவா வந்திருப்பதை கூட தெரிந்து கொள்ள முடியாது.  முன்னாடியே போய் பெரியவா தங்க வசதியான இடங்களை பார்த்து வைப்பதெல்லாம் கிடையாது.  காடோ, மேடோ, பொந்தோ, பாழடைந்த மண்டபமோ, மரத்தடியோ………பெரியவா இங்க தங்கிக்கலாம்என்று உத்தரவு போட்டு விட்டால், அதுதான் க்ஷேத்ரம்!
வழியில் ஒரு கிராமத்தில் ஒரு புராதனமான சிவன் கோவில் இருந்தது. பெரியவா அங்கே தங்கி கொஞ்சம் ஸ்ரமப் பரிஹாரம் பண்ணிக் கொண்டார்.  கிராமத்து ஜனங்கள் வந்து தர்சனம் பண்ணினார்கள். பக்கத்து கிராமங்களுக்கு காட்டுத்தீயாக பெத்தச்ச தேவுடுவந்திருக்கும் செய்தி பரவியது. உச்சிக்கால பூஜை முடிந்தது. பெரியவா அங்கு மூலையில் இருந்த மண்டபத்தில் படுத்துக் கொண்டுவிட்டார். சிஷ்யர்களும் அங்கங்கே ஸ்ரமப் பரிஹாரம் பண்ணிக் கொண்டனர்.

கோவில் அர்ச்சகர் வீட்டுக்கு போவதிலேயே குறியாக இருந்தார் போல ! உச்சிக்கால பூஜை முடிந்ததும், பெரியவா உள்ளே தங்கி இருப்பதைக் கூட நினைவில் கொள்ளாமல், கோவிலை பூட்டிக் கொண்டு போயே போய் விட்டார்! பக்கத்து கிராமங்களிருந்து பக்தர்கள் பெரியவாளை தர்சிக்க வேகாத வெய்யிலில் நண்டு,சிண்டு, குழந்தைகளை இடுப்பிலும், தோளிலும் தூக்கிக்கொண்டு, போறாததற்கு  கையில் தங்களால் இயன்ற காணிக்கைகளை தூக்கிக் கொண்டு வந்து பார்த்தால்……………கோவில் வாசலில் பெரிய பூட்டு தொங்கியது!
இந்த பட்டைபடைக்கிற வெய்யிலில் பெத்தச்ச தேவுடுஎங்க போயிருப்பார்? தெய்வமே! நம்ம கிராமத்துப் பக்கம் அவர் வந்தும், நம்மால தர்சனம் பண்ண முடியாமல் போயிடுத்தே! …………இப்படியாக பாவம் பலவிதமாக எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டு, திரும்பி நடக்க ஆரம்பித்தார்கள். உள்ளே கர்ப்பக்ரஹத்துள் இருக்கும் முக்கண்ணன்மண்டபத்தில் கண்களை மூடி ஓய்வெடுப்பது போல் படுத்திருந்தாலும்தன்னை ஆசையோடு பார்க்க வந்த பக்தர்கள் அதுவும், எந்த சுக சௌகர்யங்கள் இல்லாமல், வெய்யிலில் குழந்தை குட்டிகளோடு வந்திருக்கும் உண்மையான பக்தர்களை பரிதவிக்க விடுவானா?
சிட்டிகை போட்டு சிஷ்யர்களை எழுப்பினார்……..” ஏண்டா! வெளில பாவம் எல்லாரும் காத்துண்டிருக்காளா, என்ன?”
சிஷ்யர் பார்த்துவிட்டு ஆமாஆனா, வெளில கோவில் கதவு சாத்தி பூட்டியிருக்கு பெரியவா” அடடா……….ஜனங்கள் வந்து பாத்துட்டு ஏமாந்து போய்டுவாளேடா!………சரி இந்தா! குமரேசா! நீ டக்குனு அந்த கல்லுல ஏறி  அங்க தொங்கற மணியை பலமா அடி!
மணி ஓசை கேட்டது ! திரும்பி போக யத்தனித்த ஜனங்கள் மணி ஓசை கேட்டதும், சந்தோஷமாக கோவிலுக்கு ஓடி வந்தனர்.  காவல்காரரும் ஓடி வந்தார்! பூட்டு தொங்குவதைப் பார்த்து திகைத்தார்!  தன்னிடமிருந்த மாற்று சாவியால் கதவை திறந்து விட்டார். படிப்பறியாத பாமர ஜனங்கள் தங்களுடைய அன்பான பெத்தச்ச தேவுடுவைப் பார்த்து பரவசம் அடைந்தனர் ! எப்படிப் பட்ட பிரத்யேகமான தர்சனம்! தங்களை திரும்ப அழைக்க பெரியவா கையாண்ட யுக்தியைக் கேட்டு, “எதுவுமே தெரியாத எங்களையும் கூட ஒரு பொருட்டா நெனச்சு, கூப்பிட்டு தர்சனம் குடுத்திருக்காரே !என்று எண்ணி எண்ணி மாய்ந்து போனார்கள்.
பெரியவாளுக்கு படித்தவனும், பாமரனும் ஒன்றுதான்.

No comments:

Post a Comment